சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மூத்த அணு விஞ்ஞானி எம் ஆர் சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஆர். சீனிவாசன் (95) இன்று காலமானார். கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட எம்.ஆர்.சீனிவாசன், ஊட்டியில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார்.
சீனிவாசன் கடந்த 1955ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்து பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார். இவர் 1974-ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் மின் திட்டங்கள் பொறியியல் பிரிவு இயக்குநர், 1984-ஆம் ஆண்டு அணுசக்தி வாரியத்தின் தலைவர், 1987-ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்திய அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் சீனிவாசனுக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
எம்.ஆர். சீனிவாசன் அவர்களின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில்,
”இந்திய அணு ஆற்றல் திட்டத்தின் தூணாக விளங்கிய முனைவர் திரு. சீனிவாசன் அவர்களின் மறைவினால் வருந்துகிறோம்.
சீனிவாசன் அவர்களின் பயணம் இந்திய அணுத் திட்டத்தின் தந்தையாகப் போற்றப்படும் முனைவர் ஹோமி ஜே. பாபா அவர்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் அணு உலையைக் கட்டமைப்பதில் தொடங்கியது.
பின்பு, 18 அணு ஆற்றல் அலகுகளைக் கட்டமைப்பதில் தலைமைப் பங்காற்றி ஆற்றல் தன்னிறைவுக்கு வழிவகுத்தார். தேசத்தின் வளர்ச்சிக்காக உண்மையாகப் பாடுபட்ட அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று பதிவிட்டுள்ளார்.