குன்னூர்
நேர்று குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் கிளம்பி பேருந்து மூலமாக உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, உதகையில் இருந்து நேற்று மாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்ற வாகனஓட்டிகள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு, காவல்துறையினர் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, சரக டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்களைக் கயிறு கட்டி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.
நேற்று இரவு 9.15 மணி நிலவரப்படி 8 பேர் உயிரிழந்திருப்பதும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் தெரியவந்தது. மருத்துவமனையில் இன்று காலை மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆகி உள்ளது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்
“குன்னூர் பேருந்து விபத்தில் 9 பேர் மரணம் அடைந்தது குறித்து மிகவும் வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம் மற்றும் படு காயமடைந்தோருக்கு தலார் ரூ.1 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ. 50000 உதவித்தொகை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்”
எனத் தெரிவித்துள்ளார்.