சென்னை

மிழக பாட்மிண்டன் வீராங்கனைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நேற்று நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன், சீனாவின் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ,

“பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்!  பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கு வாழ்த்துகள்! உங்கள் தைரியமும், மன உறுதியும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து பிரகாசியுங்கள்!”

என்று பதிவிட்டுள்ளார்

இதை போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,

“பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், தங்கை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள்.

தமிழ்நாடு அரசின் ELITE திட்டம் & தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தை சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம். இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும்- தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்”

என்று பதிவிட்டுள்ளார்.