சென்னை: இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய 3 மாநிலங்களில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட வேறுசில மாநிலங்கள் இருந்தாலும், இந்த 3 மாநிலங்களில் தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. இந்த தலைகீழ் நிலைக்கு, பருவநிலை மாற்றமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள்தான் அவை. ஆகஸ்ட் 7ம் தேதிவரை, கேரள மாநிலத்தின் பற்றாக்குறை 27% என்பதாக இருந்தது. ஆனால், கடந்த 13ம் தேதி நிலவரப்படி, அம்மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளன.
திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்கள்தான் வெள்ளத்திலிருந்து தப்பியவை. கடந்த 6 நாட்களில் மட்டும் அம்மாநிலத்தில் 453.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை மழையின் காரணமாக 104 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 7ம் தேதிவரை 30% பற்றாக்குறை இருந்த நிலை மாறி, தற்போது 24% கூடுதல் தண்ணீர் கிடைத்துள்ளது. அம்மாநிலத்தின் செளராஷ்டிரா மற்றும் கட்ச் போன்ற பகுதிகளில்தான் இந்த நிலை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளார்ந்த தெற்கு கர்நாடக பகுதிகளின் கதையும் வேறுமாதிரியானது. அங்கே, ஆகஸ்ட் 7 முதல் 13ம் தேதி வரையிலான நிலவரப்படி 163.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம் 8% பற்றாக்குறை என்ற நிலைமாறி, 21% கூடுதல் என்ற நிலைக்கு வந்துள்ளது.