சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த அவலம் சென்னை அருகே உள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் அரங்கேறி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால், நோயாளிகளுக்கு அங்கு பணியாற்றும் கடை ஊழியர்கள் சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர்கள் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த துப்புரவுப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளித்த வீடியோவும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி வருகிறார்.
இந்த நிலையில், திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலைமை அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் உள் நோயாளிகளாக 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு இரவு நேரத்தில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் அவசர தேவைக்கு அங்கு தூய்மை பணியாளராக வேலை பார்ப்பவர்கள் நோயாளிக்கு ஊசி போட்டு, குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுபற்றிய வீடியோவொன்று தற்போது சமூக வலைதளதில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக ஆண்கள் உள்நோயாளிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவருக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்கதையாக நடைபெறுகிறது என அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.