சென்னை,

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது: முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாற்றம் செய்யப்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகின.

இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பட்டது.

அப்போது பதில் அளித்த முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பெரும் பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன என்றும்,

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கோ, தமிழக அரசுக்கோ மத்திய அரசிடம் இருந்து இதுபற்றி எந்தத் தகவலும் வரவில்லை. மத்திய அரசிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.

இந்நிலையில்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழுக்கூட்டம் இன்று  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது செம்மொழி தமிழாய்வு இடமாற்றம் செய்யப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன் முதலாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து 2004-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தொடர்ந்து சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அந்தந்த மாநிலங்களில் செம்மொழி வளர்ச்சிக்காக செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன.  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் செயல்பட்டன. ஆனாலும்  அவற்றுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது.

இதனால் செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மொழி குறித்த ஆராய்ச்சி மற்றும் மொழி  ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் பணிகளில் இந்த ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.