சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. அதுபோல, மாநிலங்களிலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தமுடியாமல் உள்ளன. தமிழகத்தில் பிளஸ்2 மாணாக்கர்களுக்கான செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில், தொற்று அதிகரிப்பு காரணமாக, பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆலோசனை கூட்ட முடிவுக்கு பிறகு செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘ ” சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும். அதை பொறுத்தே தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், பாலியல் புகார்கள் காரணமாக, ஆன்லைன் கல்விமுறையைக் கண்காணிப்பதற்காக கமிட்டி அமைக்கப்பட உள்ளது.
அந்தக்குழு,கல்விக்கட்டணம் தொடர்பாக , தனியார்ப் பள்ளிகளில் வரும் புகார்கள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தகம் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.