சென்னையில் அடித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்து முடித்த ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

ஹரிசுதன் உடலை பார்க்க அவருடன் படித்த சக மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது கடும் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சக்தி என்ற மாணவன் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுவனுக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாததாலும், இணை நோய்கள் இருந்ததாலும் உயிரிழந்துள்ளதாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் கோடை மழை பெய்த நிலையில் தற்போது தாங்கமுடியாத வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுமளவுக்கு வெயில் அடிப்பதை அடுத்து சாலைகளில் அதிக போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இந்த நிலையில் நண்பனின் உடலை பார்க்க சென்றபோது மாணவன் சக்தி சுருண்டு விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.