சென்னை: முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரத்தின் மீது அக்கட்சியினர் நடத்திய தாக்குதல் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இந் நிலையில், கூட்டத்தில் அதிமுகவின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம், குமரி மாவட்டஅதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி, கட்சியில்ல பிளவை ஏற்படுத்தி வருவதாக கூறி அதிமுக தலைமை அலுவலகத்தில் கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த சிலர் கோஷமிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட மூத்த நிர்வாகிகள் யாரையுமே அவர் மதிப்பதில்லை என குற்றம் சாட்டினார்கள். அகில உலக எம்ஜிஆர் மன்ற செயலாளரான தமிழ் மகன் உசேனை கூட தளவாய் சுந்தரம் மதிப்பதில்லை என்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
தமிழ் மகன் உசேன் உள்ளிட்டமூத்த நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் புறக்கணிக்கபடுவதாகவும், அதற்கு காரணம் தளவிய் சுந்தரம்தான் என்றும் முழக்கமிட்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்று விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். காரில் ஏறிய தளவாய் சுந்தரத்தை சுற்றி வளைத்து சிலர் தாக்குதல் நடத்தினர். அதில் அவர் லேசான காயம் அடைந்தார்.
பின்னர், போலீசார் தலையிட்டதால் கூட்டம் கலைந்து சென்றது. அதனால் அதிமுக தலைமை அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.