சென்னை: அரசியல் கட்சியினரைப்போல தொடரும் திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் சீமான் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் வருண்குமார் ஐபிஎஸ், சீமானை விட மாட்டேன், ஓய்வு பெற்றாலும் விட மாட்டேன் என்று கூறியதுடன், சீமான் தனக்கு தொழிலதிபர் மூலம் தூது அனுப்பியதாக கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ நார் நாராய் கிழித்து தொங்க விட்டுள்ளார்.
அரசு பணியில் உள்ள வருண்குமார் ஐபிஎஸ், சாதாரன கட்சி தொண்டரைப்போல, ஒரு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குறித்து பேசி வருவது, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில், எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் காட்டும் காவல்துறையினர், மக்கள் பாதுகாப்பில் காட்டுவது இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றமும் பலமுறை இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், திருச்சி டிஐஜி வருண்குமார், சீமான் மோதல் அரசியல் கட்சிகளின் மோதல்போல ஒருவரை ஒருவர் விமர்சித்து வருவதுடன், இது ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எஸ்பி வருண்குமார் கைது செய்த விவகாரம் மற்றும் ஆடியோவை வெளியிட்ட விவகாரத்தில் அவரை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும் கைது செய்வேன் என அவர் கூறியது சமூக வலைதளங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை, இந்த விவகாரத்தை, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார், நேரடியாக என்னுடன் மோத தயாரா என வருண்குமாருக்கு கேள்வி எழுப்பியதுடன், ஐபிஎஸ் பதவியை ராஜினாமா பண்ணிட்டு வாங்க.. மோதி பார்க்கலாம். என சவால் விடுத்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற வருண்குமார் செய்தியாளர்கள சந்தித்தபோது, “சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன். சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை” என தெரிவித்திருந்தார்.
டிஐஜி வருண்குமாரின் இந்த பேட்டி, அரசியல் களத்தில் மேலும் அனல்பறக்கச் செய்தது. உயர்பதவியில் உள்ள ஒருவர், சாதாரண மனிதர்போல பேசியது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. வருண்குமார் அரசியல் செய்வதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், டிஐஜி வருண்குமாரின் பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நான் போய் மன்னிப்பு கேட்க வருண் குமார் டிஐஜி அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியதுடன், நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு… குடுத்துடு பார்த்திடுவோம் என கூறினார்.
எனக்கும் அண்ணனுக்கும் இடையில் பிரச்சனை வேண்டாம். எல்லோரையும் அனுப்பி முடித்து விடுங்கள் என சொன்னது நீ. நான் எதற்கு அவரிடம் போய் பேசனும் என்று கூறினார்.
அப்போது, செய்தியாளர் சீமானிடம், நீங்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதா கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு,
நீதான் பெரிய அப்பா டக்கர்… இவராச்சே… துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே… எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல…
நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு… குடுத்துடு பார்த்திடுவோம்.
குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.
நீ செல்போன் திருடன்… ஆடியோ திருடன்… 14 செல்போன்களை திருடி ஆடியோவை வெளியிட்டவன் நீ…
ஆடியோவை வெளியிட்ட அயோக்கிய பயன் நீயா.. இல்லையா?…
அரசியலோடு மோத துப்பில்லாமல் அவனை முன்னால் நிறுத்தி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்… என திமுக அரசை கடுமையாக சாடியதுடன், அவருக்கு உடனடியாக ஏன் டி.ஐ.ஜி. பிரமோசன்.
எல்லோருக்கும் பணி மாறுதல். இவருக்கு மட்டும் ஒரே இடத்தில். என்னை என்ன பண்ணிடுவே… தமிழ் மக்களுக்காக போராடும் என்னை பிரிவினைவாதி எனக் கூறுகிறார். இது போலீஸ்காரன் வேலையா… அரசியல் கட்சி தலைவர் மாதிரி எப்படி பேட்டி கொடுக்கிறாய்.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட என்னைப் பற்றி பேச மாட்டார்கள். பேசாம மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே…
நீங்கள் பேசுங்க… அவரை ஏன் முன்னாடி நிறுத்துகிறீர்கள். நான் போய் மன்னிப்பு கேட்க அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? அவர் ஏதோ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு… மன்னிப்பு கேட்பது பரம்பரையிலேயே கிடையாது.
நான் மன்னிப்பு கேட்க முதலில் நீ யாரு,.. தவறு செய்தது நீ… தொழிலதிபர் யார்? அவரை கூட்டிக்கொண்டு வா… பத்திரிகையாளர்களை விட்டு, உயர் காவல் அதிகாரிகளை விட்டு நீ கெஞ்சின…
இவ்வாறு சீமான் ஆவேசமாக கூறினார்.
அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்