சென்னை: ஈரோட்டில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் நாம் தமிழர் கட்சி முறையிட்டு உள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் அதிகமாக நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரரித்து பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். மானத் தமிழ் மக்கள்தான் முதலியார். போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார் என்றவர், தமிழ்நாட்டில் தூய்மை பணி செய்ய வேறு வழியில்லாமல் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார். அவரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களை வைத்து போராட்டம் என்ற பெயரில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நேற்று இரவு கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சீமான் மீது மாடியில் இருந்து கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 6 நாம் தமிழர் கட்சியினரின் மண்டை உடைக்கப்பட்டது. அடுத்து நடைபெற்ற மோதலில் திமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்தது. இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் 12 பேர், திமுகவினர் 4 பேர் மற்றும் 3 போலீஸ் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கே துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். மேலும் சீமான் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சேவியர் பெலிக்ஸ், சங்கர் ஆகியோர், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் முறையிட்டனர். அப்போது, தங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை எனவும், தாக்குதல் சம்பந்தமாக போலீசிலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், தங்கள் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் முறையிட்டனர்.
இதேபோல சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சார்பில் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி ஆஜராகி, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் முறையிட்டார்.
ஈரோடு கலவரம் தொடர்பாக செய்தியாளர்களிம் பேசிய சீமான், நான் என்ன பேசிவிட்டேன் என்று என் மீது வன்கொடுமை வழக்கு போட்டார்கள். இவர்கள் கொலுசு கொடுக்கிறார்கள். குக்கர் கொடுக்கிறார்கள். இதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடுதான் கொடுக்கிறார்களா? அவர்கள் அனுமதி வைத்துக்கொண்டுதான் இந்த வேலையை செய்கிறார்களா?
அதிமுக, திமுக எல்லாம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் இப்படி செய்கிறதா? மக்களை கூட்டிக்கொண்டு இவர்கள் மண்டபத்தில் அடைகிறார்கள். இதெல்லாம் தேர்தல் ஆணைய அனுமதியோடு நடக்கிறதா? அவர்களுக்கு ஒரு சட்டம்.. எங்களுக்கு ஒரு சட்டமா? இதுதான் ஜனநாயகமா?
நாங்கள் அமைதியாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தோம். எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாடியில் இருந்து எங்கள் பிள்ளைகள் மீது கல்லை தூக்கி வீசி எறிகிறார்கள். எங்களை தாக்கியது திமுக – காங்கிரஸ்தான். பாகிஸ்தான், இலங்கையில் இருந்தா எங்களை தாக்க போகிறார்களா?
நாங்களும் திருப்பி கத்தி, கட்டையை கொண்டு வந்தால் ஓகேவா? நாங்கள் அடித்தால் கலவரம் ஏற்படும், நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோம் என்ற நினைப்பா? இப்படித்தான் ஆட்சி நடக்கிறதா? கல்லை வைத்து அடித்தால் நாங்கள் போய்விடுவோம் என்று நினைக்கிறீர்களா? அப்படித்தான் எங்களை பார்த்தால் தெரிகிறதா?
ஜனநாயம் இங்கே எங்கே இருக்கிறது சொல்லுங்கள்? இது பணநாயகம் கொண்ட நாடு. நான் இப்போது என்ன அருந்ததியர் பற்றி பேசிவிட்டேன் என்று என் மீது வழக்கு போடுகிறீர்கள். என் மீது வழக்கு போடுங்கள். உங்கள் அப்பா என்னை ஜெயிலில் போட்டார். நான் அடங்கவில்லை. நீங்கள் என்னை தூக்கி பாருங்கள். முடிஞ்சா என்னை தூக்குங்கள்.
நாளை முதல்வர் ஸ்டாலின் பேரணி வரும் போது நாங்களும் தகராறு பண்ணுவோம். அப்படி செய்தால் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் பேரணியை ரத்துசெய்வார்களா? எங்கள் பேரணியை ரத்து செய்தது போல அவர்கள் பேரணியை ரத்து ரத்து செய்வார்களா என கேள்வி எழுப்பினார்.