புதுச்சேரி,

புதுச்சேரியில் கவர்னருக்கும், முதல்வருக்கும் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி திடீரென டில்லி சென்றுள்ளார்.

புதுச்சேரி கவர்னராக பாரதியஜனதாவை சேர்ந்த  முன்னாள் ஐபிஎஸ் கிரண்பேடி பதவி வகித்து வருகிறார். அவர் அரசு  நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறி, புதுவை  காங்கிரஸ் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக கடந்த வாரம் புதுவை சட்டமன்ற கூட்டத்திலேயே முதல்வர் நாராயணசாமி கவர்னர் கிரண்பேடிக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில்  மூன்று நாள் பயணமாக டில்லி சென்றுள்ள  புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி,  மத்திய அமைச்சர்கள், மற்றும் அரசு செயலர்களை சந்திக்க இருக்கிறார்.

அப்போது  மருத்துவ நுழைவுதேர்வுன ‘நீட்’, மருத்துவப்படிப்பு கலந்தாய்வு குறித்து சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருவதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி உயர்வை குறைக்க வலியுறுத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பேரவை கூட்டம் நடந்து வரும் நிலையில் முதல்வர் திடீரென டில்லி புறப்பட்டு சென்றது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கிரண்பேடி குறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் புகார் கூற சென்றிருப்பதாகவும், மோடியை சந்திக்க அனுமதி கிடைத்தால், அவரிடம் கிரண்பேடியின் அதிகார மீறல் குறித்து புகார் கூற டில்லி சென்றிருப்பதாக வும் கூறப்படுகிறது.