மெல்போர்ன்: அனைத்துவகை கிரிக்கெட்டிற்கும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸை நியமிக்க வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.
தற்போதைய நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளுக்கான கேப்டனாக ஆரோன் பின்ச் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக டிம் பெய்ன் இருக்கிறார். ஆனால், டிம் பெய்னின் கேப்டன்சி வெற்றிகரமானதாக இல்லை. இதனால், அணியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இந்நிலையில், கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் கிளார்க், “கேப்டன்சிக்கு தயாராகிவிட்டார் பேட் கம்மின்ஸ். அணிக்கான பங்களிப்பை செய்வதற்கு எந்த நேரத்திலும் தயாராகவே இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில், தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் பேட் கம்மின்ஸ். தேவையான நேரத்தில், தேவையானதை செய்யக்கூடிய கம்மின்ஸின் கேரக்டர் சிறப்பானது.
டிம் பெய்னுக்கான நேரம் முடிந்துவிட்டது என்றால், வேறுசில இளம் வீரர்களை அணியில் சேர்த்து, ஸ்மித், வார்னர், லயன் மற்றும் ஹேசில்வுட் போன்றவர்களின் உதவியுடன் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லலாம். அதேசமயம், கேப்டன் பதவிக்கு பேட் கம்மின்ஸே பொருத்தமானவர். அவர்தான், அனைத்துவித கிரிக்கெட்டிற்குமான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட வேண்டும்” என்றுள்ளார் மைக்கேல் கிளார்க்.