கராச்சி: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதேசமயம், இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி தொடர்பான சில சுவாரஸ்யமான அம்சங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது.

34 வயதில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளராக அறிமுகமாகிய நுமான் அலி, 2வது இன்னிங்ஸில் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை தனது முதல் ஆட்டத்திலேயே எடுத்து அசத்தினார். மற்றொரு பந்துவீச்சாளர் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்குத் துணையாக இருந்தார்.

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக புதிதாகப் பொறுப்பேற்ற பாபர் ஆசமுக்கு முதல் போட்டியே வெற்றிகரமானதாக அமைந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுடன் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி பெறும் 5வது வெற்றி இதுவாகும். கடந்த 2007ம் ஆண்டுக்குப் பின், தற்போதுதான் முதன்முறையாக பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது. 15 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.