ஐ.எஸ்.எல். லீக் போட்டி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை – கேரளா அணிகள் மோதின. முதல் பாதியில் கேரளாவை மிரட்டியது சென்னை அணி. முதல்பாதி ஆட்டம் மற்றும் இரண்டாம் பாதியில் சில நிமிடங்கள் வரை சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கார்னர் கிக், இலக்கை நோக்கி ஷாட் அடிப்பது, பவுல் செய்வது என சென்னையின் ஆதிக்கம்தான் முழுமையாக ஓங்கி இருந்தது. 22வது நிமிடத்தில் சக வீரர் கொடுத்த பாஸை, லெஃப்ட் விங் திசையில் இருந்த சென்னை கேப்டன் மெண்டி, லேசாக டிரிபிளிங் செய்து கோல் நோக்கி அடித்தார். அது கேரளா டிஃபண்டர் மீது பட்டு கோல் ஆனது. 1-0 என முன்னிலை பெற்றது சென்னை அணி.
ஆனால், இடைவேளைக்குப்பின் கேரளா அணியினர் செயல்பாடுகளில் ஒரு ஆக்ரோஷம் தென்பட்டது. பந்து கிடைத்தால் எதைப்பற்றியும் யோசிக்காமல் அட்டாக் செய்ய துவங்கினர். அப்படி அட்டாக் செய்யும்போது, 51வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டனர். 60வது நிமிடத்தில் கேரளா அணியின் வினீத் லெஃப்ட்டில் இருந்து அடித்த கிராஸ், வடூவின் உடம்பில் பட்டு கோல் நோக்கி பாய்ந்தது. உஷாராக இருந்த சென்னை கோல் கீப்பர் டைவ் அடித்துப் பிடித்து விட்டார். கேரளா அணியினர் செய்த அட்டாக்யை அதுவரை சமாளித்த சென்னை அணி வீரர்களுக்கு அதற்கு அடுத்து தான் அதிர்ச்சியே காத்திருந்தது.
67 வது நிமிடத்தில் ஜெர்மன் டிரிபிளிங் செய்து கொண்டே கோல் நோக்கி முன்னேறி சென்றார். ஆனால் சென்னை டிஃபண்டர்களால் அவரை தடுக்க முடியவில்லை. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒரே ஷாட்டில் கோல் ஆக்கினார். 1-1 என ஆட்டம் சமநிலைக்கு மாறியது. பதிலடி கொடுக்க முயன்ற சென்னை அணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 85 மற்றும் 89-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து சென்னை அணிக்கு பேரதிர்ச்சி கொடுத்தனர் கேரள அணியினர்.
இறுதியாக, நடப்பு சம்பியன் சென்னை அணியை இறுதி நிமிடங்களில் அட்டாக் செய்து, சொந்த மண்ணில் 3-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது கேரள அணி. இந்த வெற்றியின் மூலம் கேரளா புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. சென்னை 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.