புதுடெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லாவை பணி நீக்கம் செய்வதற்கான செயல்பாட்டை, நாடாளுமன்ற நடவடிக்கையின் மூலம் துவக்குமாறு கேட்டுக்கொண்டு, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் எஸ்.என்.சுக்லா மீது ஊழல் முறைகேட்டு புகார்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென 18 மாதங்களுக்கு முன்னரே, உச்சநீதிமன்றம் சார்பில் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த வேண்டுகோளை வைத்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, சுக்லாவுக்கு ஒதுக்கப்பட்ட நீதி பரிபாலன பொறுப்புகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன.

இந்நிலையில், தனக்கான நீதி பரிபாலன பணிகளை ஒதுக்குமாறு, தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்திருந்தார் சுக்லா. ஆனால், அந்த வேண்டுகோளை நிராகரித்த ரஞ்சன் கோகாய், நீதிபதி சுக்லாவை பதவி நீக்கம் செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை நாடாளுமன்ற செயல்பாடுகளின் மூலம் மேற்கொள்வதற்கான வேண்டுகோளை பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.