டில்லி

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தகில் ரமணி மீது சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த தகில் ரமணி யை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது.   இதை எதிர்த்து தகில் ரமனி தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.   இந்நிலையில் தகில் ரமனியை பற்றி பல புகார்கள் எழுந்துள்ளன.

அவர் சென்னை புறநகர்ப்பகுதியில் இரண்டு அடுக்குமாடி வீடுகள் ரூ.3.18 மதிப்பில் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.  அத்துடன் இவருக்குச் சிலை கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சருடன் உள்ள நட்பின் மூலம் இந்த வீடுகளை இவர் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆனால் தனக்கும் இந்த விவகாரத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தகில் ரமணி மறுத்து வருகிறார்.

இந்த வீடு விவகாரத்தில் ஆறு வங்கிக் கணக்குகளையும் சிபிஐ மேற்கோள் காட்டுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.   அதன்படி இதில் மூன்று கணக்குகள் இவருக்கும் இவர் கணவருக்குமானதாகும்.  மற்றொன்று இவருக்கும் இவர் தாயாருக்குமானதாகும்.   மற்றொன்று  இவர் ஊதிய வங்கிக் கணக்கு மற்றும் கடைசி கணக்கு இவர் மகனுடையதாகும்.

இவருடைய மகன் பெயரில் இருந்து ரூ.1.61கோடி மாஹிமில் உள்ள தகில் ரமணியின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.   அதன் பிறகு அந்தப் பணம் அவ்ரும் அவர் தாயும் சேர்ந்து இயக்கும் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.   அதன் பிறகு அதிலிருந்து ரூ. 18 லட்சம் எடுக்கப்பட்டு அடுத்த நாளே மற்றொரு காசோலை மூலம் அந்த பணம் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.   இந்தத் தகவலை ரஞ்சன் கோகாய் மற்றும் சிபிஐ தரப்பில் இருந்து  ஒப்புக் கொள்ளவும் இல்லை , மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.