டில்லி

த்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 30000 கோடி இடைக்கால ஈவுத்  தொகையாக எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5% ஆகக் குறைந்துள்ளது.   கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.   எனவே மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் காரணமாக வரி வருவாயில் குறைவு ஏற்படும் என்பதால் அரசின் நிதி நிலை பாதிப்படைய வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது.

மற்றும் இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3.3% என்னும் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   எனவே  அரசுக்கு தேவைப்படுமானால் ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டிய ஈவுத் தொகையில் இருந்து இடைக்கால ஈவுத் தொகையாக அளிக்க ரூ. 30000 கோடி வரை மத்திய அரசு கோரிக்கை விடுக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்தத் தகவல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இடைக்கால ஈவுத் தொகை பெறுதல், தேசிய சிறு சேமிப்பு நிதியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் அரசு மும்முரமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றது.   ஏற்கனவே கடந்த நிதியாண்டில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.28000 கோடி வரை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.