சென்னை: சென்னையில் இரவு முதல் மழை குறைந்துள்ளதால், சென்னையில் இன்று அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும்  என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால், நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது.

இதனால், பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் மற்றும் சுரங்க பாதைகளில் தேங்கிய நீர் மாநகராட்சி ஊழியர்களால் மோட்டார் கொண்டு  அகற்றப்பட்டது. நள்ளிரவுவரை தொடர்ந்து மழைநிர் வடிகால் பணி நடைபெற்றதால்,. பல  சாலைகளில் நீர் அகற்றப்பட்டு உள்ளது. இதனால், சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சாலைப் போக்குவரத்து  சீரானது.

இந்த நிலையில்,  சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில்கள் காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.