திருவனந்தபுரம்:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்டு அரசு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் அதனுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், பாஜக பெரும்பான்மை உள்ளதால்,. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் நிறைவேற்றி. குடியுரசுத்  தலைவர் ஒப்புதல் பெற்று அமல்படுத்தி உள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் ஆளும் மாநில கம்யூனிஸ்டு போராட்டம் அறிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் கேரள அரசின் முடிவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.

அதன்படி,  திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து சத்தியாகிரக போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

அவருடன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி  சார்பில்,  எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும்  போராட்டக்களத்தில் பங்கேற்றார். ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அறி முகப்படுத்தியதன் மூலம் நாட்டில் மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது.  ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை அமல்படுத்தவே பா.ஜனதா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் இறையாண்மை மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதனை ஏற்க மாட்டார்கள்.

நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிக்கும் பா.ஜனதாவின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். இதற்காகவே இந்த போராட்டம் நடக்கிறது என்றார்.

சபரிமலை விவகாரம் உள்பட பல பிரச்சினைகளில்  எலியும், பூனையுமாக மோதிக்கொள்ளும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்  தற்போது இணைந்து மத்தியஅரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.