திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் எத்தனை பேர் பயனடைவார்கள் தெரியுமா?

Must read

டில்லி

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மூலம் பயன் பெறுவோர் பற்றி புலனாய்வுத் துறை தகவல் அளித்துள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் படி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதரீதியாகத் துன்புறுத்தலால் இந்தியாவுக்குள் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்குக் குடியுரிமை வழங்க உள்ளது.  இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன்பு வந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதா தாக்கல் செய்யும் போது மதரீதியான துன்புறுத்தலால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்குள் தஞ்சம்  புகுந்துள்ளனர் எனவும் அவர்களுக்கு நீதி வழங்கவே இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் இந்த மசோதாவுடன் புலனாய்வுத் துறை நாடாளுமன்றக் குழுவுக்கு ஒரு தகவல் அளித்திருந்தது.   அந்த தகவலின்படி தற்போதைய நிலையில் இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் மொத்தம் 31,313 பேர் ஆவார்கள். இதில் 25447 பேர் இந்துக்கள்.   அவர்களைத் தவிர 5807 சீக்கியர்கள், 55 கிறித்துவர்கள், 2 பவுத்தர்கள் மற்றும் 2 பார்சிகள் ஆகியோர் உள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், “இவர்களைத் தவிர இந்த திருத்தத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர் அவர்கள் மதரீதியாகத் துன்புறுத்தப் பட்டு இந்தியா வந்துள்ளனர் என்பதை நிரூபிக்க வேண்டும்.  அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது இந்த விவரங்களை அளித்திருக்கவில்லை எனில் இப்போது விண்ணப்பிப்பது மிகவும் கடினமாகும். “ எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றக்குழு இந்த மசோதாவின் மூலம் 31,313 பேர் மட்டும் பயனடைவார்களா எனக் கேட்டதற்குப் புலனாய்வுத் துறை, “ஆம்.  இவ்வளவு பேர் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.  மீதமுள்ள அனைவரும் ஏற்கனவே குடியுரிமை பெற்றுள்ளனர்.  அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் ரேஷன் கார்டுகள் உள்ளன.” என உறுதி அளித்திருந்தது.

ஆனால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யும்  போது அமித்ஷா, “நான் அவை உறுப்பினர்களை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் குடியுரிமை பெற்று அவர்கள் வாழ்வில் ஒளி வீசும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.  அடிக்கடி அவர் லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மக்கள் என இவர்களைக் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

More articles

Latest article