டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய நாட்டின் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் அவரது வீட்டிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சாலையோரம் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். சிலர் “ஜப் தக் சூரஜ் சாந்த் ரஹேகா, பிபின் ஜி கா நாம் ரஹேகா” என்ற முழக்கங்களை எழுப்பினர்.
முப்படை தளபதி பிபின் ராவத் தனது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்துக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி பாலம் விமானப்படைத் தளத்தில் இருந்து பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ஆகியோரின் உடல்கள் ராணுவ வாகனத்தில் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தலைமை மார்ஷல் வி.ஆர். செளத்ரி, கடற்படை தலைமை அட்மிரல் ஹரி குமார் உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ஹரீஷ் ராவத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மலர் வளையம் உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிபின் ராவத் உடலுக்கு வைத்து மரியாதை செலுத்தினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.பல்வேறு நாடுகளின் ராணுவ அதிகாரிகள், பிரான்ஸ், இஸ்ரேல் நாடுகளின் தூதர்கள் மரியாதை செலுத்தினர்.
அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களும் பிபின் ராவத் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இருவரின் உடல்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய மூதாட்டி ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
இறுதியாக பிபின் ராவத், மதுலிகா ஆகியோரின் உடல்களுக்கு அவர்களின் மகள்கள் கிருத்திகா, தாரிணி ஆகியோர் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, விபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தல் ஏற்றப்பட்டு, இறுதி ஊர்வலம் தொடங்கி இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.