விருப்பமில்லாத பெண்களின் பின்னால் சுற்றி, அவர்களின் மனதைக் கெடுக்கும் ’ரெமோ’த்தனமான சில்றை விஷயங்களைச் செய்ததால் ’சமூக அக்கறையாளர்’களிடமிருந்து வண்டை வண்டையாக வாங்கிக் கட்டிக்
கொண்ட சிவகார்திகேயன், அதே ’சமூக அக்காறையாளர்’களை எப்படி
பாராட்ட வைப்பது என்று தீவிரமாக யோசித்து இப்படிபட்ட ஒரு கதையில்
நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. கண்டிப்பாக பாராட்டுவார்கள். வாழ்த்துக்கள்,

கொலைகார குப்பத்தில் எல்லோரும் அழுக்காகவும், வெட்டுக் குத்து
தொழிலைச் செய்து கொண்டும் இருக்கையில் பாலிடெக்னிக் படித்த ’அறிவு’
மட்டும் சிறிய எஃப்.எம். ரேடியோ நடத்த விரும்புகிறான்.

ஆனால், அந்  ஏரியாவைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் காசி, அதை அனுமதிப்பதில்லை.ஒரு கட்டத்தில் காசியின் சம்மதத்துடன் ரேடியோவை தொடங்குகிறார். ஆனால், அது காசிக்கே பிரச்சினையாக முடிகிறது.

அதனால் அதை இழுத்துமூடி விட்டு, தன் குடும்ப வறுமையைப் போக்க வேலைக்காரன் ஆகிறான்,மற்ற குப்பத்தாரைப் போல வெட்டு குத்தில் இறங்கி கூலிப் படை ஆகாமல்,சஃப்ரோன் என்கிற நொறுக்குத் தீனிகள் தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்குசேர்ந்து கடுமையாக உழைக்கிறான்..

அத்துடன் தன்னுடைய குப்பத்து ஆட்கள்சிலரையும் அந்த கம்பெனியில் வேலைக்காரர்களாக சேர்த்து விடுகிறான்.அதில் ஒருவரான விஜய் வசந்த் கொலை செய்யப்படுகிறார். அந்தகொலையை செய்த காசி சொல்லும் பல விஷயங்கள் அறிவுக்குஅதிர்ச்சியாக இருக்கின்றன.

ஏற்கனவே நம் அனைவருக்குமே தெரிந்த, ஆனாலும் நாம் அதிர்ச்சியாகாமல்
இருக்கும் அதிர்ச்சிகள் தான் அவை.குழந்தைகள் உட்பட நாம் அனைவரும் அன்றாடம் உட்கொள்ளும்நொறுக்குத் தீனிகளில் கலப்படம் செய்யப்படும் பல்வேறு ரசாயனபொருட்களின் கலப்படமும் அதனால் ஏற்படுகின்ற உடல் கோளாறுகளும் தான் அந்த அதிர்ச்சியான தகவல்கள்.

திரையில் சொல்லும் அந்த அதிர்ச்சியான தகவல்களையெல்லாம்
தக்காளியும் வெண்ணெயும் கலந்த ஃப்ளேவர் பொடி தூவிய மெகா சைஸ்
பாப் கார்னை கருக்கு மொருக்கு என தின்னபடியே தான் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். தீனிப் பண்டாரங்கள்.

எழுத்தாளர்(கள்) சுபா இதைப் போன்ற பால் மற்றும் உணவுப் பொருட்களில்
ரசாயனம் கலக்கும் ’வித்தியாசமான’ கதைகளை கை, கால் வசம் இன்னும்
எவ்வளவுதான் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. மாற்றான், தனி
ஒருவனைத் தொடர்ந்து ‘வேலைக்காரனிலும்’ தங்களது கை வரிசையைக்
காட்டியுள்ளனர். கதை என்று மோகன் ராஜாவின் பெயர் போட்டாலும்
சுபாவின் பங்களிப்பும் இருப்பதாக டைட்டிலில் போடப்படுகிறது.
நல்ல விஷயம்தான்.

கொலைகார குப்பத்தில் நல்ல ’அறிவு’ ஆன பையனாக சிவகார்த்திகேயன்.
தன்னுடைய காமெடி இமேஜை உடைத்து வேற லெவலுக்கு நகர
முயற்சித்திருக்கிறார். காமெடியான காட்சிகளில் நடிக்கும் போதிருக்கும்
அவருடைய தன்னம்பிக்கையின் வேகம், உணர்வுப் பூர்வமாக நடிக்க
முயற்சிக்கும் போது ஆமாம் முயற்சிக்கும் போது குறைந்து விடுகிறது.

நமக்கு இதெல்லாம் செட் ஆகுமா என்கிற சந்தேகம் பார்வையாளர்களை
விடவும் அவருக்குத்தான் அதிகமிருக்கிறது. சில காட்சிகளில் கொஞ்சம்
களைப்பாகவும் தெரிகிறார். ஒரு வேளை குப்பத்து பையன் என்பதால்
பாத்திரமாக வாழ முடிவெடுத்து கருத்திருப்பார் போல. ஓப்பனிங் சாங்கில்
கூட பெரிதாக எடுபடவில்லை. அதை விடவும் நண்பனின் சாவில் ஆடும்
அந்த நடனத்தில் ஈர்க்கிறார்.

சமூகத்திற்கு நல்லது சொல்லும் கதையை தேர்ந்தெடுத்துக் கொண்டதுடன்
மட்டுமின்றி தன்னுடைய சேஷ்டைகளையெல்லாம் நிறையவே குறைத்து
நல்ல பையனாக மாறியிருக்கிறார் சிவா. பாராட்டுக்கள். ’சஃப்ரோன்’ என்கிற கம்பெனியில் ஒரு அதிகாரியாக மலையாள நடிகர் பகத்
பாசில். மலையாளத்தில் நல்ல நடிகர் என்கிறபெயரெடுத்தவர்களையெல்லாம் தமிழ் சினிமாவுக்கு வரவைத்து கை நிறைய காசைக் கொடுத்து பதிலுக்கு கைமா ஆக்கி அனுப்பி விடுவார்கள்.

அண்மையஉதாரணம் நிவின் பாலி. ஆனால், பகத்துக்கு அந்த நிலைமை வராது
போலிருக்கிறது. தனக்கு பொறுத்தமான பாத்திரம் என்று தெரிந்துதான்இறங்கியிருக்கிறார் போலிருக்கிறது. கார்ப்ரேட் வில்லனாக மிகப்பொறுத்தமாக இருக்கிறார். அனாயசமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

இனி, அவருக்கு நல்ல கதா பாத்திரங்கள் அமைய அந்த சோட்டானிக்கரை
பகவதி அம்மெ அருள வேண்டும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவாள் எடுத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
கொலைகார குப்பத்து காசியாக அவருடைய பாத்திரத்திற்கு ஒரளவு நியாயம்
சேர்த்திருக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக எண்ணெய் வழியும் முகத்துடன் நயன்தாரா.
அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரை
ஆவணப்பட இயக்குனராக்கியிருக்கிறார்கள். ஆனால், என்ன படமெடுத்தார்
என்றெல்லாம் சொல்லாமல் விட்டு விட்டார்கள். பெண்ணுரிமை குறித்து
பேசும் போது பெரியாரையெல்லாம் மேற்கோள் காட்டி விட்டு ஆண் கதா
நாயகனுடன் ஒரு ஓரமாக ஒட்டிக் கொள்கிறார். நயன்.

உணவுப் பொருட்களில் கலக்கும் ரசாயனங்களுக்கு மகனை பலியாகக்
கொடுத்துவிட்டு, அதற்காகப் போராடும் நுகர்வோராக சினேகா. நம்பகத்
தன்மைக்கு அப்பால் இருப்பினும் அவருடைய பாத்திரம் வலுவாக
உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதிக்கான போராட்டத்தில் தன்னையே ஆயுதமாக,
ஒரு சாட்சியாக மாற்றத் துடிக்கும் அந்த பாத்திரம் நயனின் பாத்திரத்தை
விடவும் வலுவானதாக இருக்கிறது.

’தனி ஒருவனில்’ ஹீரோ, வில்லன் இருவருக்கும் சமமான பாத்திரங்களாக
இருந்த போதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்தது. குறிப்பாக ஜெயம்
ரவி தன் காதலை எழுதிக் காட்டும் காட்சி அலாதியானது. ஆனால், இந்த
கதையில் அப்படியான காட்சிகள் எதுவுமில்லை.
தனி ஒருவனின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு இப்படியான ஒரு கதையை
எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

ஹீரோவுக்கு சமமான வில்லன் என்கிற விஷயம் மட்டும் ஓரளவு ஒர்க்
அவுட் ஆகியிருக்கிறது. தனி ஒருவனில் ஹீரோவின் எல்லா
அசைவுகளையும் திட்டங்களையும் மறைந்திருந்து மைக்ரோ ’பக்’ மூலம்
ஒட்டுக் கேட்டு கேட்டு, அவற்றையெல்லாம் உடைக்கும் வில்லன் என்றால்,
வேலைக்காரனில் ஹீரோவின் எல்லா அசைவுகளையும் கூட இருந்தே
தெரிந்து கொள்ளும் வில்லன் அவ்வளவுதான். ஆனால், த.ஒ. வில் இருந்த
சுவாரசியம் மட்டும் இதில் மிஸ்ஸிங்.

மற்றபடி, வெள்ளைக்காரன் காலத்தில் அவர்களுக்கு கூலி வேலை
செய்ததால் கூலிக்கார குப்பம் என்ற பகுதிதான் இப்போது கொலைகார
குப்பமாக மாறியிருக்கிறது என்று அக்கறையுடன் சொல்லும் செய்தி
முக்கியமானது. குப்பத்து ஆட்களை தவறாக சித்தரித்து விடக் கூடாது
என்கிற அவருடைய அக்கறைக்கு பாராட்டுக்கள். மேலும் நிறைய சண்டைக்
காட்சிகளையும் டூயட்டுகளையும் தவிர்த்ததற்கும் சேர்த்தே பாராட்டுக்கள்.

கார்ப்ரேட் கம்பெனிகளின் வியாபார தந்திரம், விற்பனை அணுகு முறை,
நுகர்வுக் கலாச்சார உருவாக்கம், விற்பனையை அதிகரித்து நடுத்தர மக்களின்
பாக்கெட்டை காலி செய்தல் என்று சமகால நுகர்வுக் கலாச்சாரம் குறித்து
உளவியல் ரீதியாக அணுகி அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறார்.
கொலைகார சாரி.. கூலிக்கார குப்பத்தைச் சேர்ந்த, அம்பேத்கரை படிக்கிற
ஒருவன் தான், தன்னைச் சுற்றி நிகழும் அநீகளைக் கண்டு கோபம்
கொள்ளவும், சமூகத்தில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவும்
முயற்சிக்க முடியும் என்கிற இயக்குனருடைய கருத்து மிகப் பெரிய
பாராட்டுக்குரியது. ஹாட்ஸ் ஆஃப் மோகன் ராஜா.

குஜராத்தில் சுயேட்சை வேட்பாளராக நின்று வென்றிருக்கும் ஒடுக்கப்பட்ட
மக்களின் பிரதிநிதியான ஜிக்னேஷ் மேவானி சமீபத்திய உதாரணம்.
வேலைக்காரனின் மிகப் பெரிய பலம் அதன் திரைக்கதையும் வசனமும்தான்.
ஒரு கம்பெனியில் பணியாற்றும் எல்லா மட்டத்தைச் சேர்ந்த ஊழியர்களும்
நேர்மையாக உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த கம்பெனியிலிருந்து
தரமான பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று நகரும்

சுவாரசியமான திரைக்கதைக்கு, கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது வசனம்.
’உலகின் மிகச் சிறந்த சொல் செயல்’, நாம படகுன்னு நெனச்சி ’திமிங்கலத்து
முதுகு மேல உக்காந்திட்டிருக்கோம்’ என்று போகிற போக்கில் மிகப் பெரிய
விஷயங்களை தந்து செல்கிறது வசனங்கள்.

ஆனால், படத்தின் பின் பாதியில் நிகழும் சம்பவங்கள் எல்லாம்
நம்பகத்தன்மையற்று சற்றே நாடகம் போல நீள்வதால் சுவாரசியத்தைக்
குறைக்கிறது. அதுவும் படத்தின் நீளம் இருக்கிறதேஞ் அண்மையில் இவ்வளவு
நீஞ்.ளமாக எந்த படமும் வரவில்லை. மூன்று மணி நேரம். யாரந்த எடிட்டர்?
அனேகமாக அடுத்தடுத்த காட்சிகளில் நீளத்தைக் குறைத்து விட
வாய்ப்பிருக்கிறது.

படத்தின் இன்னொரு முக்கியமான கலைஞர் கலை இயக்குனர்.
ஆட்சியாளர்களால் கைவிடப் பட்ட, ஒதுக்கப்பட்ட குப்பத்தை அப்படியே
வடிவமைத்திருக்கிறார். ஆனால், அந்த குப்பத்தை க்ரே க்ஷேடில் தான் காட்ட
வேண்டுமா. ராம்ஜியின் படப்பதிவு இன்னும் வண்ணங்களைக்
கலந்திருக்கலாம்.

அனிருத்தின் இசை பெரிதாக எடுபடவில்லை. வலுக்கட்டாயமாக
’ஹிட்’டாக்கப்பட்டுள்ள ’கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடல் கூட திரையில்
கொண்டாட்டமாக இல்லை. பின்னணி இசையும் தூங்கி வழிகிறது.
இந்த படத்தின் மிகப் பெரிய பலவீனம் க்ளைமேக்ஸ்.

தனி ஒருவனில் வில்லனின் புத்திசாலித்தனத்தை ஹீரோ தன்னுடைய
புத்திசாலித்தனத்தின் மூலமாகத்தான் வெல்வான். ரசிகர்கள் அதை ப்ளாக்
பஸ்டர் ஆக்கினார்கள். ஆனால், வேலைக்காரனில் வில்லனின் தந்திரங்களை
ஹீரோவே முறியடிக்கவில்லை. துணைப் பாத்திரங்கள் செய்த வேலைகளை
எல்லாம் வெறும் வசனங்களாக சொல்லி முடித்து வைக்கிகிறான். ஒரு
கட்டத்தில் அது சுவாரசியத்தைக் குறைத்து நீளமான அறிவுரைகளாக மாறி
விடுகிறது.

திரைக்கதையில் நிகழ்ந்திருக்கும் இந்த குறைபாடு பார்வையாளர்களை
ஏமாற்றம் கொள்ள வைக்கிறது. இந்த ஏமாற்றம் தான் இந்த படத்தை ஒருபெரிய வெற்றிப் படமாக்குவதிலிருந்து தடுத்திருக்கிறது. இப்போதைக்கு இது
சுமார் வெற்றிதான்.

இறுதியில் மே தினத்தில் செங்கொடியை ஏந்தி வீர முழக்கமிடுகிறார்கள்.
பார்க்க கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. வணிக ரிதியான தமிழ்
சினிமாவிலும் நிறைய அரசியல் கலந்த சிந்தனைகளைக் காண முடிகிறது.
படத்தில் பயங்கரமான ’நச்சுத் தன்மை’ கலந்த உணவுப் பொருட்களை
உற்பத்தி செய்யும் கம்பெனியின் பெயரை கவனித்தீர்களா?

சஃப்ரோன். (saffron)

அப்டின்னாஞ் ’காவி’ தானே!

அதீதன் திருவாசகம்.