சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள்.

ஜெய் க்ருஷ் கதிர் , பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார்

விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது, “கலை வடிவம் ஏதாவது ஒரு வகையில் அன்பையும் மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் ஓர் அங்குல அளவிலாவது ஏற்படுத்தி உயர்த்த வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது. சிறுவன் யோகேஸ்வரன் நன்றாக பாடி, நடித்துள்ளான். இசையமைத்துள்ள ஜெய் கிருஷ் சிறப்பாக தனது பணியை செய்துள்ளார்.

எனது நண்பர் ஒரு சிறிய பட்ஜெட் படம் எடுத்துவிட்டு அவருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையில் நிகழ்ந்த மனஸ்தாபத்தால் சில காட்சிகளுக்குப் பின்னணி இசை முடிக்க முடியாமல் நின்று இருந்தது. படத்தை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை. அப்படிப்பட்ட, இக்கட்டான நேரத்தில் ஜெய்கிருஷ் வந்து ஊதியம் பற்றிப் பேசாமல் எதுவுமே வாங்காமல் தனக்கு எந்தப் பெயரும் கிடைக்காது என்று தெரிந்தும் பின்னணி இசை அமைத்துக் கொடுத்து உதவினார்.

அவர் திறமைக்கான உயரங்கள் காத்திருக்கின்றன. இன்னும் பெரிய மேடைகள் அவருக்கு அமையும்.

சிறுவன் யோகேஸ்வரன் மேலும் வளர்வான்.வாழ்த்துக்கள் ” என்று வாழ்த்தினார்.

விழாவில் பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் பேசும்போது,”நான் இந்த யோகேஸ்வரனை மட்டுமல்ல அவனுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அவனது பெற்றோரையும் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

நல்லதொரு இசை முயற்சியாக இதைச் செய்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இசையில் எடுத்துக்கொண்ட கான்செப்ட் புரிகிறது. சிலநிமிடங்களில் ஒலிக்கும் இதற்காக பல மணி நேரம் அவர்கள் உழைத்திருப்பது தெரிகிறது.இந்தப் பாடலை பார்க்கும்போது நல்ல நம்பிக்கையை அளிக்கிறது. வாழ்க்கை விசித்திரமானது. பல ஏற்றங்களையும் தாழ்வுகளையும் கொடுக்கக்கூடியது. நமது தாழ்வான நேரங்களில் யாராவது நம்பிக்கை வார்த்தைகள் சொல்வதற்கு என்று வேண்டும். அப்படி ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இதை நான் பார்க்கிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,”இங்கே யோகேஸ்வரனின் திறமையைப் பார்த்தோம். பெற்றோரும் ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரம், அனைவருக்கும் பெற்றோர்கள் ஓரளவுதான் முன்னே கொண்டுவர முடியும். அதற்குப் பிறகு தன்னுடைய சொந்தத் திறமையால் உழைப்பால்தான் அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் பிரகாசிக்க முடியும்.

அப்படி இரண்டு தளபதிகளைச் சொல்லலாம் இளைய தளபதி விஜய் தளபதியாக இருந்து பல வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு அவரது தந்தை ஆரம்பத்தில் தூண்டுகோலாக இருந்தார். அதுபோல்தான் தளபதியாக இருந்து தலைவராக மாறி இப்போது முதல்வராக இருக்கும் அவருக்கும் தந்தை ஒரு தூண்டுகோலாக இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவரது உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்திருக்கிறார்” என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, “யோகேஸ்வரனையும் அவனை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால ஒருவரை வாழ்த்தும் போதும் தான் மனம் தூய்மை பெறுகிறது.

இங்கே யோகேஸ்வரன் பாடியதையும் ஆடியதையும் பார்த்தபோது அற்புதம் என்று சொல்லத் தோன்றியது .இறைவனின் அருள் பெற்று வந்த குழந்தை அவன்.

யோகேஸ்வரனின் பெற்றோரை,குறிப்பாகத் தாயைப் பாராட்ட வேண்டும் . இந்தச் சிறு வயதிலேயே இசையையும் நடனத்தையும் ஊட்டி வளர்த்துள்ளார்கள்.

இங்கே இரண்டு தம்பிகள் நடனம் ஆடினார்கள். உடலை வளைத்து நெளித்து மட்டும் ஆடவில்லை எலும்பை உடைத்து நொறுக்கி ஆடுகிறார்கள் என்று நினைத்தேன் . நான் பயந்து போய் விட்டேன். அற்புதமாக ஆடினார்கள்.அழகு அற்புதம்.

பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்களால் சினிமாவிற்கு ஒரு பயனும் கிடையாது. சினிமா வாழ்வது சிறிய படத் தயாரிப்பாளர்களால்தான்.

இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாரும் பெரிதாக வளர்ந்து விட்டது போல் ஹீரோக்கள் தெலுங்குப் பக்கம் போகிறார்கள். இன்னும் சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஸ்ரீதேவியின் கணவர் குடும்பத்திற்குப் படங்கள் கொடுக்கிறார்கள்.

பல ஆண்கள் படிக்கச் சொன்னால் குடிக்கப் போகிறார்கள். குடிப்பதற்குச் சினிமா கதாநாயகர்கள் வழிகாட்டுகிறார்கள்.அவன் குடிக்கப் போகிறான். படிப்பில் தோல்வி கண்டால் பாருக்குப் போகிறான்” என்றார்.

இந்த பாடல் ஆல்பத்திற்கு வரிகள் எழுதி இசை அமைத்து இயக்கியிருக்கும் ஜெய் கிருஷ் கதிர் பேசும்போது, “முதலில் ஒரு பாடல் இசையமைப்பதாகத்தான் இருந்தது. ஆல்பம் தயாரிப்பதாக எண்ணம் இல்லை. ஆனால் போகப்போக அதை உருவாக்க வேண்டுமென்று யோகேஸ்வரனின் பெற்றோர்கள் விரும்பியபோது பட்ஜெட் பற்றி எந்த எல்லையும் குறிப்பிடாமல் அவர்கள் செலவு செய்தார்கள். எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தார்கள். நானே இயக்கி பாடலை உருவாக்கி இருக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை” என்று கூறினார்.

இந்த விழாவில் எஸ் பேங்க் மேலாளர் தினேஷ்குமார், வாஸ்கோடகாமா படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஜெம் டிவி சீதாபதி,ஒளிப்பதிவாளர் இளையராஜா, படத்தொகுப்பாளர் ராஜா, இயக்குநர் விமர்சகர் கேபிள் சங்கர், ஆல்பத்தில் நடித்துள்ள நடிகை சரண்யா ரவிச்சந்திரன், யோகேஸ்வரனின் தந்தை ரகுராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக வந்திருந்தவர்களை யோகேஸ்வரனின் தாயார் சங்கீதா வரவேற்றார்.