ண்டலூர்

ண்டலூர் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய வாயிலில் உள்ள ஒரு தேவாலயம் அகற்றப்பட்டுள்ளது.

சென்னை புறநகரான வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த பேருந்து நிலையம் 2022 மார்ச் மாதம் முதல்   செயல்பட தொடங்கும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் ஏற்கனவே விஜிபி நிறுவனத்தினர் உலக அமைதி மாதா கோயிலைக் கட்டி இருந்தனர்.

புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அமைப்பதற்குத் தேவாலயம் இடையூறாக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் கோயிலில் இருந்த சிலையைப் பத்திரமாக அப்புறப்படுத்தினர். கோயில் கட்டிடம் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடிக்கப்பட்டு மாதா சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.