சென்னை:
சென்னை மாம்பலம் பகுதியில் நடைபெற்ற கிறித்துவ கூட்டத்தை எதிர்த்து முழக்கமிட்ட இந்துத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கிறித்துவக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை மாம்பலம் பகுதியில் ரயில் நிலைய சாலையில், நேற்று மாலை கிறித்துவ அமைப்பு ஒன்று கூட்டம் நடத்தியது. மாலை ஐந்து மணி முதல் ஒலிபெருக்கிகள் வைத்து கிறித்துவ பிரச்சாரம் நடந்தது.
கூட்டத்தில் இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ். வி.ஹெச்.பி போன்ற இந்துத்துவ கட்சி மற்றும் அமைப்பினர் கிறித்துவக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள், “ஹனுமன் ஜெயந்தியை நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அயோத்யா மண்டபம், முருகாஸ்ரமம், சத்யநாராயணப் பெருமாள் ஆலயம், சாய்பாபா கோவில் ஆகியவற்றில் இந்து மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாலையில் மேடை அமைத்து, இந்து கடவுள்களை இழிவு படுத்தி பேசுகிறார்கள். தவிர கூட்டம் நடக்கும் இந்த பகுதியில் 90 சதவிகிதம் இந்து மக்கள்தான் வசிக்கிறார்கள். சைதை, சின்னமலை பகுதிகளில் இருந்து 25 வேன்களில் ஆட்களை அழைத்து வந்து கூட்டம் என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இழிவு செய்கிறார்கள்” என்று காவல்துறையிடம் வாய்வழி புகார் தெரிவித்தார்கள்.
காவல்துறையினர், “கிறித்துவ கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெற்றுள்ளார்கள். ஆகவே அவர்களது கூட்டத்தை தடை செய்ய முடியாது” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் தி.நகர் தொகுதி பாஜக தலைவர் குட்டி கணேசன், வி.எஸ்.ஆர்.சி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த வாசுஜி உட்பட பலர், கூட்ட மேடையின் முன் நின்று எதிர்ப்புக்குரல் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர், இந்துத்துவ அமைப்பினர் 25 பேரை கைது செய்து காசி மடம் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.
அதன் பிறகும் இந்துத்து ஆதரவாளர்கள் சிலர் எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் சிலர், அருகில் இருந்த கோயில் அருகில் கூடி, “ஸ்ரீராமஜெயம்” உச்சரிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கிறித்துவ அமைப்பினர், இரவு பத்து மணி வரை நடத்த திட்டமிட்டிருந்த கூட்டததை செய்துவிட்டு எட்டு மணிக்கே கூட்டத்தை முடித்துக்கொண்டனர்.