நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டபோதும் பேட்டிங்கில் திணறியது. ரோஹித் ஷர்மா, புஜாரா, ஜடேஜா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் சொதப்பியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

இந்த தோல்விக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி “உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியை ஒரே ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது ஒரு டெஸ்ட் தொடர் என்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.”

“இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்தும், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடும் அணியை போல வலுவான ஒரு டெஸ்ட் போட்டி அணியை உருவாக்குவதற்கு தேவையானவை குறித்தும் ஆலோசித்து முடிவெடுப்போம்.

துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்ளக் கூடிய பொருத்தமான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். திறமையை வெளிப்படுத்த தயாராகவும், நம்பிக்கையுடனும் நிறைய வீரர்கள் உள்ளனர்.

சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணியில் கொண்டு வர வேண்டும்” என்று இந்த தோல்விக்கு எந்த ஒரு வீரரையும் காரணம் கூறாமல் பேசினார்.

இந்த போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 44 ரன்னும் இரண்டாவது இன்னிங்சில் 13 ரன்னும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.