ஜெயலலிதாவின் நண்பரும் நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி, மரணமடைந்தார்.
2
ஏற்கெனவே முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார் சோ. ராமசாமி. அதே போல மீண்டும் சமீபத்தில் அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த, அதே அப்பல்லோ மருத்துமனையில் சோ ராமசாமி சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவு நலம் பெற்ற அவர், பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருங்கிய நண்பர். “சோ. ராமசாமி என் உடன் பிறந்த அண்ணன் போன்றவர்” என்று ஜெயலலிதா சொன்னது உண்டு. ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை சொல்பவர் சோ என்றும் சொல்லப்படுவது உண்டு.
இடையில் சசிகலாவை தனது போயஸ் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றிய போது, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரிலான சில சொத்துக்களுக்கு சோ பொறுப்பாளராக ஆனார் என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் மிக மோசமானதை அறிந்த சோ.ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் மரணமடைந்தார். இதை அவரது மருத்துவர் விஜய சங்கர் உறுதிப்படுத்தினார். “மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலை திடீரென மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்” என்று விஜயசங்கர் தெரிவித்தார்..