திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு வரும் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி உள்பட பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு வழங்கப்பட்டதுடன், கடந்த மாதம் பவுர்ணமி முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திருவண்ணா மலையில் சித்ரா பவுர்ணமியன்று வழக்கமாக கிரிவலம் செல்பவர்களை பல மடங்கு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்கு கடந்த இரு ஆண்டுகளாக தடை நீடித்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டதால், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வருகிற 15, 16-ந்தேதிகளில் நடைபெறும் நாட்களில் பக்தர்கள் கிரிவலத்துக்கு தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர், சித்ரா பவுர்ணமியன்று பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதி உள்பட அடிப்படை வசதிகளை அனைத்து துறையினரும் செய்து தர ஏற்பாடு செய்யப்படும். மேலும், நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க பட நடவடிக்கை எடுக்கவும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவையான எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைப்பது, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரிசையை முறைப்படுத்தி நெரிசல் ஏற்படாமல் தரிசனம் செய்ய அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று தொடர்பாக பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முககவசம் அணியவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சித்ரா பவுர்ணமியன்று பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில், ஆன்மீக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் வரும் 14-ந்தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்படாத இடத்தில் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.