சென்னை:  ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்தார்.  சென்னை விருகம்பாக்கத்தில் மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். மக்களால் `சின்னக் கலைவாணர்’ என்று அழைக்கப்பட்ட விவேக் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மரணம டைந்தார். அவரது மறைவு திரையுலகத்தினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்ட விவேக் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் 17-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி திடீரென  விவேக் மனைவி அருட்செல்வி தனது மகள் அமிர்தா நந்தினி மற்றும் விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் கொடுத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் உடனே அரசாணை வெளியிடுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், விவேக் நினைவாக, அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலை “சின்ன கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று  ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக அரசுத்தரப்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ எனப் பெயரிடப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினர், சென்னை மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “விவேக் எனது நீண்டகால நண்பர். பொதுவாக தற்போது சாலைகளுக்கு தனிநபர்களின் பெயர் வைப்பது இல்லை. அப்படி பெயர் வைக்க வேண்டும் என்றால் பல்வேறு நிலைகளில் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் விவேக் பெயரை வைக்க வேண்டும் எனக் கேட்டவுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. விவேக் மறைவுக்கு 2 நாட்களுக்கு முன்பு அப்போது இருந்த ஆளும் கட்சியாக இருந்தவர்கள் விவேக்கை தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர் இறப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு கூட தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு உயிரிழந்து இருக்கிறார். தமிழகத்தில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்த ஒரு ‘பிராண்ட்’ ஆக நடிகர் விவேக் செயல்பட்டார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  சைதாப்பேட்டை பகுதியில் நாட்டு மரங்கள் நிறைய நட்டு வைத்து இருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ’வனத்தில் ஒரு தொகுதி’ என்ற நிலைமையில் சைதாப்பேட்டை தொகுதி இருக்கும். சைதாப்பேட்டையில் 98 ஆயிரம் மரம் தற்போது வரையும் நட்டு இருக்கிறோம்.1 லட்சம் மரம் நட்டு அந்த 1 லட்சமாவது மரத்திற்கு நடிகர் விவேக் மரம் என்ற பெயர் வைக்க இருக்கிறோம்.. ஆனால் அதனைப் பார்க்க அவர் தான் இல்லை”.

இவ்வாறு கூறினார்.