டில்லி

சீனப்படைகள் லடாக் எல்லைப்பகுதியில் இருந்து விலகிச் செல்வது மேலும் தள்ளிப்போவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் குவிக்கப்பட்டது பதட்டத்தை உண்டாக்கியது.  அதையொட்டி இந்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.  இரு பக்க அதிகாரிகளும் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகு சீனப்படைகள்  விலக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சீனப்படைகள் திடீரென இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.  இது நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.   சீன நிறுவனங்களுடன் உள்ள வர்த்தகத் தொடர்புகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.    சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   சீனப் பொருட்களை வர்த்தகம் செய்ய எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கைப்படி சீனப்படைகள் கல்வான் பகுதியில் மேலும் அதிகமாக குவிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.  இதுகுறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வரும் போதும் சீனப்படைகள் இங்கிருந்து விலகிச் செல்வது மேலும் தள்ளிப்போவதால் ல்டாக்கில் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே சீனப்படைகள் மேலும் மேலும் குவிக்கப்படுவதால் இந்தப் படைகளை உடனடியாக திரும்ப அழைக்கும் எண்ணம் சீன அரசுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.   மேலும் தேவை இல்லாமல் சீனப்படைகள் திரும்பச் செல்வதைத் தள்ளிப்போட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.