புதுடெல்லி:
புதிய செயற்கைக்கோள் படங்களில் கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதியில் சீன ஊடுருவல்கள் தெள்ளத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததையடுத்து, இருநாட்டு வீரர்களும் அந்த சர்ச்சைக்குரிய இடத்தை விட்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் தற்போது சீன ராணுவம் கால்வான் பகுதியில் பல கூடாரங்களை அமைத்துள்ளதை புதிய செயற்கைக்கோள் படம் காட்டியுள்ளது. கடந்த மே மாதம் 22-ஆம் தேதி அன்று அதே இடத்தில் ஒரே ஒரு கூடாரம் இருந்ததை செயற்கைக்கோள் காட்டியிருந்தது. மேலும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரமேஷ் பாத்தி, ரோந்து புள்ளி 14-ஐ சுற்றி தெளிவான ஊடுருவல்கள் உள்ளன என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த படங்கள் கனரக வாகனங்களின் தெளிவான இயக்கத்தை காட்டுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல் முறையாக ஆதிக்க எல்லைக் கோட்டிற்கு(LAC) ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள கால்வான் ஆற்றின் மீது சீன வீரர்கள் கூடாரங்கள் அமைத்து இருப்பதை தெளிவாக காணமுடிகிறது.
இந்த மாதம் 16-ஆம் தேதி எடுக்கப்பட்ட படங்களில், கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் புல்டோசர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது, 22- ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் சீன வீரர்கள் நதியின் நீரோட்டத்தினை மாற்ற முயற்சிப்பதை காண முடிந்தது, மேலும் சாலை விரிவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ள படுவதையும் செயற்கைக்கோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் இந்தியா சாலைகளை விரிவுபடுத்தவில்லை என்றாலும் ஆதிக்க எல்லைக் கோட்டிற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு நீண்ட நெடுஞ்சாலையை அமைத்து முடித்துள்ளது. இந்த சாலை தெற்கில் தொடங்கி வடக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்ட்டியுடன் இணைகிறது. இந்தியாவின் இந்த கட்டுமான பணிகளை சீனா எதிர்ப்பதாக தெரிகிறது, ஆனால் இதற்க்கு நேரடி அதிருப்த்தியை சீனா தெரிவிக்கவில்லை.
கடந்த திங்கட்கிழமையன்று லெப்டினன்ட் ஜெனரல் தரவரிசை அதிகாரிகள் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தையில், சீனா- இந்தியா ஆகிய இரு தரப்பினரும் சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருந்தாலும் சீன ராணுவம் அங்கிருந்து விலகிச் செல்வதாக தெரியவில்லை மாறாக இன்னும் அதிகமான வீரர்களை அங்கு குவித்துக்கொண்டு இருப்பது மட்டுமல்லாமல், கூடாரங்கள், கனரக வாகனங்கள் என்று ஏதோ பெரிதாக திட்டம் தீட்டுவதாக தெரிகின்றது.
மேலும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பாங்கோங் கரையிலுள்ள, ஃபிங்கர்ஸ் பகுதியில், ஹாட் ஸ்ப்ரிங்ஸ் பகுதி, கால்பால் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கே டெப்சான் சமவெளிகள் போன்ற பல இடங்களில் சீனா ஊடுருவல்கள் தெளிவாக பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.