சீனாவின் ஸின்ஜியங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி நகரில் நவம்பர் 24 ம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

இந்த தீ விபத்தை தொடர்ந்து சீனா முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் இன்றளவும் தொடர்ந்து வரும் நிலையில் சீன கம்யூனிஸ்ட் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் என்ற பெயரில் குறிவைத்து தனிமைப் படுத்தி அவர்களை துன்புறுத்தலில் ஈடுபடுவதாக சீன அரசு மீதி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் அதிபர் ஸி ஜிங்பிங்-க்கு எதிராகவும் பேசுபவர்கள் கொரோனா பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு மருத்துவமனை என்ற பெயரில் சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்யப்படுவதாகவும். வீட்டுத்தனிமை என்ற பெயரில் போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் மிகப்பெரிய மாகாணமான ஸின்ஜியங்-கில் உள்ள உரும்க்கி நகரில் ஆகஸ்ட் மாதம் முதல் 100 நாட்களுக்கும் மேலாக தொடரும் ஊரடங்கு உத்தரவால் அங்குள்ள மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நவம்பர் 10 ம் தேதி அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா காரணமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்த 10 பேர் அந்த தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி இறந்தனர்.

அடுக்கு மாடி குடியிருப்பின் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தீயணைப்பு நிலையம் இருந்த போதும் உடனடியாக தீயணைப்பு வண்டிகள் வரவில்லை என்றும் இந்த தீயை அணைக்க மூன்று மணிநேரம் ஆனதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும் வேறு சிலர் அங்கு அடைத்து வைத்தக்கப்பட்டவர்கள் நாசகார செயலால் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரனாதைத் தொடர்ந்து உரும்க்கி, ஷாங்காய், பெய்ஜிங் என்று நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கினர்.

25ம் தேதி தொடங்கிய இந்த ஆர்பாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் நடைபெற்றது.

இதில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற பிபிசி செய்தியாளர் எட் லாரன்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தனது பத்திரிகையாளர் அடையாள அட்டையை காவல்துறையிடம் காண்பிக்க வில்லை என்று சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அதேவேளையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் கருத்து சுதந்திரம் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கூறி வெள்ளை காகிதத்தை தாங்கி பெய்ஜிங் நகரில் நேற்று பேரணி சென்றனர். பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்த பகுதி வழியாக ஆர்பாட்டக்காரர்கள் வெற்று பேப்பரை கையில் பிடித்தபடி சென்றனர்.

கம்யூனிஸ்ட் அரசு ஆதரவுடன் அந்நாட்டு அரசை விமர்சிக்கும் அரசுகளை எதிர்த்து மட்டுமே இதுவரை போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் சீன அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபடுவது அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.