சீன அதிபர் ஜி ஜிங்பிங் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் இருந்து சீனா திரும்பிய அதிபர் ஜி ஜிங்பிங்-கை சீன மக்கள் விடுதலை இராணுவ (PLA) ஜென்ரல் லீ கியாமிங் (Li Qiaoming) உத்தரவின் பேரில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜி ஜிங்பிங்-கின் அரசியல் எதிரியாக கருதப்படும் முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

சீன ஊடகங்களோ அல்லது சர்வதேச ஊடகங்களோ இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை என்ற போதும் பெய்ஜிங்கை நோக்கி சீன ராணுவ வாகனங்கள் படையெடுத்து வரும் வீடியோ ஒன்றை சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங் பதிவிட்டுள்ளார்.

“பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள ஹுவான்லாய் கவுண்டியில் இருந்து ஹெபே மாகாணத்தின் ஜாங்ஜியாகோ வரை சுமார் 80 கி.மீ தூரத்துக்கு ராணுவம் அணிவகுத்துள்ளதாகவும்.

பிஎல்ஏ தலைவர் பதவியில் இருந்து ஜி ஜிங்பிங் நீக்கப்பட்டுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, நேற்று 23 ம் தேதி சீனாவில் 6000 க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜி ஜிங்பிங் குறித்து எந்தஒரு தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதுகுறித்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.