சென்னை:

ன்று ஒரு மணி நேரத்தில் சீன அதிபர் ஜின்பிங் சென்னை வர உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக தாம்பரம் முதல் கிண்டி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புராதான நகரமான  மாமல்லபுரத்தில் இன்று மாலை சந்திக்க இருக்கின்றனர். 2 நாட்கள் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இதை யொட்டி, இன்று மதியம் 2.10 மணி அளவில் சீன அதிபர் சென்னை விமான நிலையம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை உள்பட பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்து நேற்று போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதலே பெரும்பாலான போக்குவரத்து முடங்கிய நிலையில், சில வாகனங்கள் மட்டுமே குறிப்பிட்ட சாலைகளின்  சென்று வந்தன.

இந்த நிலையில், மோடி வருகை தந்ததைத்தொடர்ந்து 12 மணி முதல் சென்னையின் முக்கிய பிரதான சாலையான அண்ணா சாலை கிண்டியில் இருந்து தாம்பரம் வரை  போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோன்று ஜின்பிங் மாமல்லபுரம் செல்லும் சாலையான,  ராஜிவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரையுள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிண்டி முதல் சின்னமலை வரை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.