சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது ராணுவத்தின் தயார்நிலையை இன்று ஆய்வு செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் அருகே இந்திய சீன எல்லையை ஒட்டிய க்ஹுஞ்சரப் கணவாய் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் போர் தயார் நிலை குறித்தும் ஆய்வு செய்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன புத்தாண்டை ஒட்டி ராணுவத்தின் தயார் நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு செய்தார்.
எல்லைப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு, வான் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை பராமரிப்பு மற்றும் அவசரகால தாக்குதல் குறித்து ராணுவத்தின் பல்வேறு பிரிவு வீரர்களுடன் கலந்துரையாடிய ஜி ஜின்பிங் இராணுவத்தின் போர் தயார்நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்புப் பிரிவு வீரர்களை வெகுவாகப் பாராட்டிய சீன அதிபர் அவர்களின் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடவும், புதிய பங்களிப்புகளைச் செய்யவும் அவர்கள் தயாராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சீனக் கடற்படையைச் சேர்ந்த வீரர்களுடன் பேசியபோது, அவசரகால நடவடிக்கைக்கு தயார்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இது வழக்கமான நடவடிக்கையாக கூறப்பட்டாலும் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநில எல்லையை ஒட்டி சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இந்திய சீன ராணுவத்தினரின் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏதும் எட்டப்படாததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீன அதிபரின் இந்த ஆய்வு இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல கூடிய அளவில் உள்ளது என்று கூறி இதை அப்படியே கடந்து விடமுடியாது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.