லகான்பூர் (ஜம்மு காஷ்மீர்):  காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்த ராகுல்காந்தியை வரவேற்ற முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆதிசங்கரருக்குப் பிறகு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டவர் ராகுல் காந்திதான் என புகழாரம் சூட்டினார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் லகான்பூரில் நுழைந்து நடைபெற்று வருகிறது. அவரது யாத்திரையை  வரவேற்று தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பிரமாண்டமான வரவேற்பு பதாதைகள் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல  லகான்பூர் வந்த ராகுல்காந்தியை  ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா வரவேற்று, ராகுல் காந்தியுடன்  யாத்திரையில் ஃபருக் அப்துல்லா பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரையாக வந்தவர் ஆதிசங்கரர். அப்போது சாலைகள் ஏதும் இல்லாததால் காடுகள் வழியாகத்தான் அவர் வந்தார். ஆதிசங்கரருக்குப் பிறகு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரையாக வந்திருக்கும் இரண்டாவது நபர் ராகுல் காந்தி.

இந்த யாத்திரையின் நோக்கம் இந்தியாவை ஒன்றுபடுத்துவதுதான். மகாத்மா காந்தி மற்றும் ராமபிரானின் இந்தியாவில் நாம் அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். சமீப காலமாக இந்தியாவில் வெறுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதத்தை நிறுத்தும் போக்கு ஏற்பட்டுள்ளது.  என்றார்.

இதையடுத்து பேசிய சல்மான் குர்ஷித், இந்தியாவில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையின் எதிரிகள் இந்தியாவின் எதிரிகள்; மனிதநேயத்தின் எதிரிகள்; மக்களின் எதிரிகள்” . வட இந்தியாவில் கடும் குளிர் நிலவும்போது வெறும் டி ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதாகவும், ஒரு யோகியைப் போல அவரது செயல் இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி ராமபிரானைப் போன்றவர் என்றும் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியை ராமபிரானோடு சல்மான் குர்ஷித் ஒப்பிட்ட நிலையில், ஆதிசங்கரரோடு ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.