டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்ய 45 நிறுவனங்களுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என, மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், கடந்தாண்டு ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு, இந்தியாவில் அந்நாட்டின் நிறுவனங்கள் முதலீடு செய்யவும் தடை விதித்தது.
இரு தரப்புக்கும் இடையே சமாதானத்தை மேற்கொள்ளும் வகையில் 10 சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, எல்லையில், இந்திய சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது. தேசிய பாதுகாப்புக்கான அபாயத்தைப் பொறுத்து 200 க்கும் மேற்பட்ட முன்மொழியப்பட்ட சீன முதலீடுகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அதில், முன்னோக்கி செல்லும் திட்டங்கள் குறித்து மதிப்பாய்வு செய்த குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், விளக்கமளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ஹாங்காங்கைச் சேர்ந்த 3 நிறுவனங்களுக்கு மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகவும், அவற்றில் நிப்பான் பெயின்ட், நெட் பிளே ஆகிய 2 நிறுவனங்கள் ஜப்பானைச் சேர்ந்தவை என்றும், மற்றொன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளது.
எல்லை மோதலுக்கு பிறகு, இந்தியாவில் முதலீடு செய்ய சீனாவைச் சேர்ந்த எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் உள்பட 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை…