சீனாவின் AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek இதுவரை அதிகம் அறியப்படாத நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் கூகிள் மற்றும் OpenAI இன் படைப்புகளுக்கு போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை வெளியிட்டதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்களால் பயன்படுத்தப்படும் சிப்புகளை விட குறைவான மேம்பட்ட மற்றும் குறைவான கணினி சிப்புகளை பயன்படுத்தி DeepSeek-R1 யை உருவாக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில், இந்த AI மாதிரியைப் பயிற்றுவிப்பதற்கான கணினி சக்திக்காக $6 மில்லியனுக்கும் (ரூ. 52 கோடி) குறைவாகவே செலவிட்டதாகக் கூறியது – இது OpenAI, Alphabet மற்றும் Meta போன்ற அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் AI தொழில்நுட்பத்திற்காக செலவிடும் பல பில்லியன் டாலர்களில் ஒரு சொற்ப அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிக்கான் பள்ளத்தாக்கின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப முதலீட்டாளர்களில் ஒருவரான Marc Andreessen, DeepSeek AI மாதிரியின் வெளியீட்டை “AI இன் ஸ்புட்னிக் தருணம்” என்று பாராட்டினார்.

சிலிக்கான் வேலியின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய வகையில் உருவெடுத்துள்ள ஒரு சிறிய சீன ஸ்டார்ட்அப்பின் திடீர் பிரவேசம், AI இல் அமெரிக்க ஆதிக்கம் குறித்த அனுமானங்களுக்கு சவால் விடுத்துள்ளது.

மேலும் Nvidia, Alphabet மற்றும் Meta போன்ற நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது.

AI ஐ உருவாக்கும் குறைக்கடத்திகளை உற்பத்தி செய்வதில் கிட்டத்தட்ட ஏகபோக உரிமையைக் கொண்ட Nvidia, நிறுவனத்தின் பங்குகள் திங்களன்று, 17 சதவீதம் சரிந்த பிறகு சந்தை மூலதனத்தில் கிட்டத்தட்ட $600 பில்லியனை இழந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் OpenAI தலைமையில், டெக்சாஸை தளமாகக் கொண்ட Oracle மற்றும் ஜப்பானின் SoftBank ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் $500 பில்லியன் மதிப்பிலான AI முன்முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், DeepSeekன் AI மாதிரியை “விழிப்புணர்வு அழைப்பாக” ஏற்று செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கத் தொழில் “வெற்றி பெற போட்டியிடுவதில் லேசர் கவனம் செலுத்த வேண்டும்” என்ற தேவை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஹாங்சோவை தளமாகக் கொண்ட DeepSeek, 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் High-Flyer என்ற ஹெட்ஜ் ஃபண்டை நடத்தும் தொடர் தொழில்முனைவோரான Liang Wenfeng என்பவரால் நிறுவப்பட்டது.

சீனாவிற்கு வெளியே அதிகம் அறியப்படாத போதிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் முதலீட்டையும் இணைப்பதில் லியாங் விரிவான வரலாற்றைக் கொண்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், சீன ஊடக நிறுவனமான சினா ஃபைனான்ஸின் கூற்றுப்படி, ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் இணை மாணவருடன் சேர்ந்து, வர்த்தக உத்திகளைச் செயல்படுத்த AI ஐப் பயன்படுத்திய முதலீட்டு நிறுவனமான ஹாங்சோ ஜேக்கபி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்டை அவர் இணைந்து நிறுவினார்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முறையே ஹாங்சோ ஹுவான்ஃபாங் டெக்னாலஜி கோ மற்றும் நிங்போ ஹுவான்ஃபாங் குவாண்டிடேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பார்ட்னர்ஷிப் ஆகிய இரண்டு நிறுவனங்களை லியாங் நிறுவினார்.

2023 ஆம் ஆண்டில் சீன ஊடக நிறுவனமான வேவ்ஸுக்கு அளித்த பேட்டியில், ஸ்டார்ட்அப்கள் AI இல் ஈடுபடுவது மிகவும் தாமதமாகிவிட்டது அல்லது அது மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தை லியாங் நிராகரித்தார்.

இந்த நிலையில் DeepSeek AIன் வருகை முன்னணியில் இருக்க பில்லியன் கணக்கான டாலர்கள் தேவை என்ற அனுமானத்திற்கு சவால் விடுவதாக உள்ளது.

OpenAI 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, 4,500 ஊழியர்களைக் கொண்டுள்ளது, மேலும் $6.6 பில்லியன் மூலதனத்தை திரட்டியுள்ளது.

DeepSeek 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, 200 ஊழியர்களைக் கொண்டுள்ளது, மேலும் 10 மில்லியன் டாலருக்கும் குறைவான செலவில் உருவாக்கப்பட்டது என்று சந்தை மதிப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளது.

DeepSeek AIன் மாதிரி வெளியீட்டை அடுத்து செய்யப்பட்ட இந்த மதிப்பீடுகளை அடுத்து சீன AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek, உலகளாவிய தொழில்நுட்பத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.