பெய்ஜிங் :
சீனாவின் விண்வெளி ஆய்வில் மற்றொரு முயற்சியாக மனிதர்களை கொண்டு செல்லும் புதிய தலைமுறை விண்வெளி ஓடம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக சீன மனித விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விண்வெளி ஓடத்தின் பூமிக்கு திரும்பும் மறு-நுழைவு பகுதியானது இந்திய நேரப்படி இன்று காலை 11:19 க்கு வடக்கு சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் தரையிறங்கியதாக அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று வென்சாங் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட லாங் மார்ச் -5 பி ஹெவி-லிப்ட் ஏவுகணை வாகனத்தால் இந்த சோதனை விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இரண்டு நாட்கள் பூமியைச் சுற்றிவந்து, பல விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளை முடித்த பின்னர், பூமிக்கும் வெற்றிகரமாக திரும்பியுள்ளது.
புதிய விண்கலம் ஒன்பது மீட்டர் உயரம், அதிகபட்ச விட்டம் 4.5 மீட்டர். இதில் ஆறு முதல் ஏழு விண்வெளி வீரர்களை கொண்டுசெல்ல முடியும். மறு-நுழைவு காப்ஸ்யூல் மற்றும் சேவை காப்ஸ்யூல் என்று இந்த விண்கலம் இரண்டு காப்ஸ்யூல்கள் (பகுதி) கொண்டது. மறு-நுழைவு காப்ஸ்யூல் என்பது விண்வெளி வீரர்கள் வசிக்கும் இடமாகும், அதே நேரத்தில் சேவை காப்ஸ்யூல் விண்வெளி ஓடத்திற்கு தேவையான உந்துவிசை மற்றும் சக்தியை வழங்குகிறது.
மீண்டும் பயன்படுத்த கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓடத்தில் குடை போன்ற தொகுப்புகளும், தரையிறங்க வசதியாக ஏர்பேக்-குகளும் பொருத்தப்பட்டுள்ளது. குடை போன்ற தொகுப்பு பாதுகாப்பாக தரையிறங்க உதவும் நேரத்தில், ஏர்பேக் ஸாப்டு லாண்டிங் எனும் எந்தவித அதிர்வும் இல்லாமல் மென்மையாக தரையிறக்க உதவும்.
மனிதர்களை சுமந்து செல்லும் இந்த விண்வெளி ஓடத்தை கடந்த செவ்வாயன்று விண்ணில் செலுத்திய பின் பல்வேறு தகவல்களை சேகரித்து இன்று மீன்றும் தரையிறங்கியதாக கூறியிருக்கும் சீனா, இதில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் அல்லது ஆளில்லாமல் சோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.