பெய்ஜிங்: பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் ஆக்கிரமிப்பால் நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து சீனாவின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு முதல்கட்மாக மத்திய அரசு தடை விதித்தது.
பின்னர் நேற்று, பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய அரசின் இந்நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சகம் கூறி இருப்பதாவது: சீன நாட்டின் செயலிகளுக்கு எதிரான இந்தியாவின் தடை, சீன முதலீட்டாளர்களுக்கும் சேவை வழங்குபவர்களின் நலனுக்கும் எதிராக இருக்கிறது. இந்த நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த கவலை தருகிறது. இதை கடுமையாக சீனா எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.