டாக்கா: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்கதேசத்தில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.

திங்களன்று பிரணாப் முகர்ஜி இறந்த சில மணி நேரங்களில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்ததோடு, அவர் வங்கதேசத்தின் உண்மையான நண்பர் என்றும் புகழ்ந்தார்.

வங்க தேசத்தில், பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நேற்று ஒருநாள் துக்கமும் அனுசரிக்கப்பட்டது. ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேச தூதரகங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

இது குறித்து ஷேக் ஹசீனா கூறியிருப்பதாவது: அவர் எப்போதும் வங்கதேச மக்களால் மதிக்கப்படுபவர். முக்கியமாக இந்தியாவின் ஜனாதிபதியின் இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவரது உறுதியான ஆதரவும், பங்களிப்பும் இருந்தது. அவர் எப்போதும் ஆழ்ந்த மரியாதையுடன் எங்கள் நினைவுகளில் இருப்பார் என்று கூறி உள்ளார்.