டில்லி

ந்திய கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகெங்கும் தேவை அதிகரித்துள்ள நிலையில் சீனா இந்த மருந்துகளுக்கு பாராட்டி  உள்ளது.

கடந்த வருடம் சீனாவில் வுகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியது.  தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.  கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை கண்டறியாத நிலையில் இந்தியாவின் ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்து உலகெங்கும் பயன்படுத்தப் பட்டு வந்தது.  மலேரியாவுக்கு எதிரான இந்த மருந்தைப் பல் உலக நாடுகள் இறக்குமதி செய்து  பயன்படுத்தி வந்தன.

தற்போது பல உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன.   அவ்வகையில் இந்தியாவிலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  தற்போது தயாராகி வரும் கொரோனா தடுப்பூசிகளில் 60% வரை மற்ற உலக நாடுகளுக்கு அளிக்கப்பட உள்ளது.  பல நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் இட்டு வருகின்றன.

தென் ஆப்ப்ரிக்காவில் இருந்து 15 லட்சம் தடுப்பூசிகளுக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆர்டர் பெற்றுள்ளது.  அடுத்த 10 லட்சம் ஜனவரி இறுதியிலும் அதற்கு அடுத்த மாதம் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகளும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.  பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகள் குறித்த பேச்சு வார்த்தைகளை இந்தியாவுடன் நடத்தி வருகின்றனர்.  பிரதமர் ஏற்கனவே மனிதாபிமான அடிப்படையில் நேபாளம் மற்றும் வங்கதேசத்துக்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சீன நாட்டை சேர்ந்த குளோபல் டைம்ஸ், “இந்தியாவின் கொரோன தடுப்பூசிகளைச் சீனாவின் கொரோனா தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் போது இவையும் சீன மருந்துகளைப் போல் தரமானதாக உள்ளன.  இந்தியா உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடு என்பதை மனதில் கொள்ளும் போது அதிக அளவில் தரமான தடுப்பூசிகளை இந்நாடு உற்பத்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.

இந்தியா தனது கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு எடுத்துள்ளது உலக நாடுகளுக்கு மிகவும் நல்ல செய்தியாகும்.  இந்தியாவின் மருந்தாய்வு  மற்றும் உற்பத்தித் திறன் உலக அளவில் பேருதவியாக விள|ங்கும்.” எனத் தெரிவித்துள்ளது.  இந்தியாவுடன் தற்போது சீன உறவு மோசமாக உள்ள நிலையில் இந்த செய்தி உலக நாடுகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.