சீனாவின் இரட்டை வேடம் : இந்தியாவுக்கும் ஆதரவு பாகிஸ்தான் தீவிரவாதிக்கும் ஆதரவு!

Must read

நியூயார்க்

தீவிர வாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் துணை நிற்பதாக கூறிய சீனா பாக் தீவிரவாதிக்கு ஆதரவாக ஐ நாவில் வாக்களித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் ஜெய்ஷ் ஏ முகமது என்னும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார்.   பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான் கோட் விமானப் படைத் தளத்தில் ஜெய்ஷ் ஏ முகமது இயக்கம் தாக்குதல் நடத்தியது.   இந்த தாக்குதலுக்கான சதித் திட்டத்தை உருவாக்கியவர் மசூத் அஸார் என்பது கண்டறியப்பட்டது.   இதனால் மசூத் அஸாரை சர்வதேச பயங்கவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா ஐ நா சபையில் இரு ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை விடுத்தது.

ஐநா பாதுகாப்பு சபையில் அங்கம் வசிக்கும் 15 நிரந்தர உறுப்பினர்களில் சீனா அதை ஆதரிக்கவில்லை.   ஆனால் இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.    மற்ற நாடுகளின் வற்புறுத்தலுக்காக  சீனா தனது முடிவை பிறகு தெரிவிப்பதாக கெடு கேட்டிருந்தது.  அந்த கெடு நேற்றுடன் முடிவடைந்ததை ஒட்டி மீண்டும் அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  அப்போது சீனா அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

ஐநா பாதுகாப்புக் குழுவின் சட்டப்படி அதில் உள்ள அனைத்து நிரந்திர உறுப்பினர்களாக உள்ள நாடுகளும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.  தற்போது சீனா தனது ஆதரவை அளிக்காமல் பயங்கரவாதத்துக்கு துணை போய் உள்ளது.  இந்த தகவலை சீன அரசின் செய்தி நிறுவனம் ஒன்று பீஜிங்கில் இருந்து அறிவித்துள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சென், “சீனாவின் அண்டை நாடுகளில் முக்கியமான ஒரு நாடு இந்தியா.  இந்தியாவுடன் நல்ல முறையில் உறவு கொள்ளவே சீனா விரும்புகிறது.  இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் மேம்படுத்தவும்,  பயங்கர வாதத்தை அழிப்பதில் இந்தியாவுடன் என்றும் துணை நிற்கவும் சீனா உறுதி பூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த இரு தகவல்களையும் ஒப்பிட்ட அரசியல் நோக்கர்கள் சீனா இரட்டை வேடம் போடுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article