சீனா நேபாளத்துக்கு கண்ணாடியிழை கேபிள் தொடர்பை  சீனா  வழங்கியுள்ளது.   கொஞ்சம் கொஞ்சமாக நேபாளத்தின் மீதான தனது பிடியை இழந்துவரும் இந்தியாவுக்கு இது மேலும் ஒரு அடி என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்டை நாடான நேபாளத்துடன் பலவித ஒப்பந்தங்கள் செய்துகொண்டு தனக்கு ஆதரவான நாடாக இந்தியா தக்க வைத்திருந்தது.  நேபாளத்துக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலும் இந்தியா மூலமாகவே சென்றன. அந் நாட்டுக்கான ஆயுத தேவைகளையும் பெரும்பாலும் இந்தியா பூர்த்தி செய்து வந்தது.
ஆனால் அங்கு புரட்சி ஏற்பட்டு மன்னராட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்ததும் இந்தியா மெல்ல மெல்ல அந்நியப்பட்டுபோனது.  நேபாளம் தனது இன்னொரு அண்டை நாடான சீனாவுடன் நெருங்கியது. வர்த்தகம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டது.
சமீபத்தில்கூட, நேபாளத்துக்கு ரயில்பாதை அமைக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இந்த நிலையில்  அதிவேக இணைய (இன்டர்நெட்) வசதிக்காக நேபாளம் இந்தியாவையே சார்ந்திருக்கும் நிலையையும் மாற்ற சீனா திட்டமிட்டது.
இதையடுத்து  நேபாளத்துக்கு கண்ணாடியிழை கேபிள் தொடர்பை  சீனா  வழங்கியுள்ளது.
download (1)
இதுதொடர்பாக நேபாள அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான நேபாள் டெலிகாமின் செய்தித் தொடர்பாளர் டில்லிராம் அதிகாரி தெரிவித்ததாவது:
“திபெத் எல்லை வழியாக  இணைய சேவையை அளிப்பதற்கான தொழில்நுட்பப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.  இதற்கான தொழில்நுட்ப சோதனையும்  இரு  வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்தது.  இதையடுத்து இந்த அதிவேக இணையச் சேவை விரைவில் வணிகரீதியாக பயன்பாட்டுக்கு வரும்.
இதன் மூலம்  நேபாளத்தில் இணைய வசதியை வழங்கி வரும் நிறுவனங்கள், அதற்கான அலைக்கற்றைகளை (பேண்ட்வித்) இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்கும் நிலைமாறும். இதனால்  நேபாளத்தில் இணையச் சேவைக்கான கட்டணமும் கணிசமாக குறையும்.
உலக அளவில் மிகப்பெரிய தரவு மையங்களில் ஒன்றாக விளங்கும் ஹாங்காங் தரவு மையத்துடன் நேபாளம், தொழில்நுட்பரீதியாக நேரடியாக இணைக்கப்படும்” என்று டில்லிராம்  தெரிவித்தார்.