பீஜிங்:
இந்தியாவில் பதன்கோட் விமான தளத்தை தாக்கிய பயங்கரவாதிக்கு ஐ.நா.வில் சீனா ஆதரவு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பதன்கோட் விமான தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பயங்கரவாதிகள்
தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தலைவர் மசூது அசார் என்பவர். இவரை பயங்கரவாதியாக அறிவிக்க கோரி இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு குழுவின் 1267 கமிட்டியிடம் கடந்த மார்ச் மாதம் கோரியிருந்தது.
ஐ.நா. மூலம் இவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டால், அவரது சொத்துக்களை முடக்கவும், வெளிநாட்டு பயணங்களை தடை செய்யும் முடியும், இதனால் இந்தியா இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியது.
கடந்த மார்ச் மாதம் இது குறித்த விவாதம் ஐ.நா.வில் வந்தபோது, சீனாவின் ஒத்துழைப்பு இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரம், ஐ.நாவில் விவாதத்துக்கு வந்தது. இப்போதும் சீனா ஒத்துழைப்பு தர மறுத்தது.
ஜ.நா.,வின் இது குறித்த ஓட்டளிக்க வேண்டிய 15 நாடுகளில் சீனாவை தவிர மற்ற 14 நாடுகளும் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த சீனாவின் செய்தி தொடர்பாளர் ஜிங் சூங், ‛‛ ஐ.நா., பாதுகாப்பு குழுவின் 1267 கமிட்டியில் பட்டியலிடுவதில் சீனா எப்பொழுதும் ஓரே நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. வலுவான ஆதரங்களில் அடிப்படையிலேயே சீனா ஒத்துழைப்பு அமையும், மசூது விவகாரத்தைப் பொறுத்தவரை, பல கோணங்களில் ஆராய வேண்டி உள்ளது. இதற்கு சில காலம் தேவைப்படலாம்” என்றார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் ஐ.நா., பொருளாதார தடை குழுவில் 26/11 மும்பை தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையிலும், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் என்.எஸ்.ஜி.,(நியூகிளியர் சப்ளையர் குரூப்) நுழைவு முயற்சிக்கும் சீனா முட்டுகட்டையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ மசூதுவின் பயங்கரவாத நடவடிக்கைள் குறித்து ஆதாரங்களுடன் இந்தியா தகவல்களை அளித்துள்ளது. ஆனால் சீனா அதை ஏற்க மறுக்கிறது. சீனாவின் இந்த அணுகுமுறை பயங்கரவாதத்தக்கு ஆதரவளிப்பதாக உள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.