பெய்ஜிங்:
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்ரா நதியை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சுரங்கம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல அந்நாட்டு பொறியாளர்கள் அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளனர். இதனால் இந்திய வடகிழக்கு மாநிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்ரா நதி உருவாகிறது. அங்கு யர்லங் ட்சங்போ என அந்த நதி அழைக்கப்படுகிறது. சீனாவில் இருந்து அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் இந்த நதி வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசத்தில் பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்நிலையில் ஹாங்காங்கில் உள்ள பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில்,‘‘பிரம்மபுத்ரா நதியில் திபெத்தின் சங்ரி கவுன்டி என்ற இடத்திலிருந்து சீனாவில் ஷின்ஜியாங்கில் உள்ள டக்லமஹன் என்ற இடத்திற்கு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் திட்டத்தை தயாரித்து நிபுணர்கள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த திட்டம் ஏற்கப்பட்டால் நமது வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பிரச்னை மற்றும் அதற்காகும் அதிக செலவு குறித்து அரசு யோசனை செய்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டமில்லை என இந்திய அரசிடம் சீனா உறுதியளித்திருந்தது. இப்போது அதை மீறும் வகையில் செயல்படுகிறது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த தகவல் உண்மையில்லை. தவறான அறிக்கை. எல்லை தாண்டி செல்லும் நதி தொடர்பான ஒப்பந்தத்திற்கு சீனா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும்’’ என்றார்.