இஸ்லாமாபாத்,

னாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிஃப் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது இரு மகன்களின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் பலதலைவர்கள் மீது ஊழல் செய்து சொத்து குவித்த விவரங்கள் வெளியாகின.  அதில் இடம் பெற்ற பல தலைவர்களில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர்.

இதுகுறித்த வழக்கு காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்கனவே பதவி விலகி உள்ள நிலையில், தற்போது அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கில் நவாஸின் இரு மகன்கள் முதலீடு செய்துள்ள சொத்துக்களை முடக்க வேண்டும் என பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு கோர்ட்டான தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.

விசாரணையின்போது,  நவாஸ் ஷெரீப்பின் இரு மகன்களான ஹஸன் மற்றும் ஹுசைன் ஆகியோர் 6 நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது,   தேசிய கணக்கியல் பீரோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இ ஆவணங்களை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, நாவஸின் இரு மகன்கள்  முதலீடு செய்துள்ள பங்கு மதிப்புகளை முடக்க பாகிஸ்தானின் பங்குச்சந்தை கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, இவ்வழக்கை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் ஆஜராகாமல் நவாஸ் செரீப்பின் இரு மகன்களும் தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக அவர்கள் இருவர்மீதும்  ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.