ஷாங்காய்:
குளோனிங் முறையில் குரங்குகளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மனிதர்களையும் குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என்று விஞ்ஞாணிகள் கூறியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் பகுதி விஞ்ஞானிகள் குளோனிங் (படியாக்கம்) முறையில் 2 குரங்குகளை உருவாக்கியுள்ளனர். இதில் ஒன்று உருவாக்கி 8 வாரமும், மற்றொன்று 6 வாரமும் ஆகிறது. அவற்றுக்கு ஜோங் ஜோங் மற்றும் ஹூவா ஹூவா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குளோனிங் முறையில் ‛டாலி’ என்ற ஆடு உருவாக்கப்பட்ட முறையை பின்பற்றியே குரங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முழு ஆரோக்கியத்துடன் இருக்கம் அந்த குரங்குகளுக்கு பாட்டில் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,‘‘மனிதர்களுக்கு உருவாகும் நோய்களுக்கு தீர்வு காணும் ஆராய்ச்சிக்கு இந்த குரங்குகள் பெரிதும் உதவியாக இருக்கும். குளோனிங் மூலம் மனிதர்களை உருவாக்கும் சாத்திய கூறுகள் உள்ளது. இதற்கான தடைகள் உடைக்கப்பட்டுவிட்டன.
பல தடைகள் உடைக்கப்பட்டு விலங்குகள் உருவாக்கப்பட்டதன் மூலம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், மருத்துவ துறைக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய விலங்குகள் ஆராய்ச்சிக்கு பெரிதும் பயன்படும். புதிய மருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்னர் அவற்றை இந்த விலங்குகளில் பயன்படுத்தி பரிசோதித்து பார்க்க முடியும். இன்னும் நிறைய குரங்குகள் உருவாக்கப்பட உள்ளன’’ என்றனர்.
குளோனிங் விலங்குகள் உருவாக்குவது மனிதர்களுக்கு நல்ல விஷயம் என்றபோதிலும், இதே முறையில் மனிதர்களை உருவாக்குவது மனித குலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றே பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.