சென்னை; பட்டாசு தீக்காயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் ஏற்பட்ட பட்டாசு  தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  தமிழகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி  பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினர். சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர். தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் தீக்காய சிகிச்சை பிரிவு செயல்பட்டது. அங்கு சென்றும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் தீபாவளி பட்டாசு தீவிபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாக இருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், மா.சுப்பிரமணியன், தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்.” “அதனால் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை.” “பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.